Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு : சிபிசிஐடி விசாரணை துவக்கம்

செஞ்சி, அக். 23: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் போலீசார் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு, பெற்றோரிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமாவதி (7) என்பவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11ம் தேதி இரவு சிறுமியின் பிறந்தநாள் வீட்டில் கொண்டாடப்பட்டது. அன்றிரவு தாயின் அருகில் படுத்து உறங்கிய சிறுமியை மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

11 நாட்கள் ஆகியும் மாயமான சிறுமியை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். 3 டிஎஸ்பிக்கள், 5 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் அடங்கிய 10 தனிப்படைகள் தேடுதல் வேட்டை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 600 பேரின் செல்போன் எண்களை பெற்றும், சந்தேகத்துக்கிடமான 20 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமி மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர். காணாமல் போன சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சிறுமியின் பெற்றோர் வடிவேல், பவானி ஆகியோரிடம் சிறுமி காணாமல் போன தினத்தில் என்ன நடந்தது? யாரெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்தனர். குடும்பத்தினருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என பல்வேறு கேள்விகளை எழுப்பில் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட போலீசார் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

செஞ்சி அருகே சிறுமி காணாமல் போய் 11 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத வழக்கில், எந்த முன்னேற்றமும் இல்லாத தவெக அரசின் மெத்தன போக்கை கணடித்து திமுக சார்பில் நேற்று ஆலம்பூண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் ஆரணி எம்பி தரணிவேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, எம்பி தரணிவேந்தன், மாவட்ட எஸ்பி மதிவாணனுக்கு போன் செய்துள்ளார். எஸ்பி போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையை கண்டித்து திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி, உடனடியாக எம்பியை செல்போனில் தொடர்பு கொண்டார். இதையடுத்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

இதனால் சுமார் பத்து நிமிடம் திருவண்ணாமலை-செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பச்சையப்பன், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், வல்லம் மத்திய ஒன்றிய செயலாளர் இளவழுதி மற்றும் திமுக அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.