கள்ளக்குறிச்சி, அக். 23: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது தவெக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ராகேஷ் நேற்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட 21 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களுடன் குறைகேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்திருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏவுடன் அதிகாரிகள் கூட்டம் நடத்தக்கூடாது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த எம்எல்ஏ ராகேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிடம் கூறியதாகவும், அதற்கு முறையாக எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ ராகேஷ், தனது ஆதரவாளர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு ஒரு மாதிரியாகவும், எதிர்கட்சி எம்எல்ஏவுக்கு ஒரு மாதிரியாகவும் அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தனது ஆதர்வாளர்களுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா ஆகியோர் வந்து எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தை கைவிட எம்எல்ஏ மறுத்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து எம்எல்ஏ ராகேஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏ
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ராகேஷ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக எம்எல்ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அதிமுக முறையிட்டது. பின்னர் எம்எல்ஏ ராகேஷ், கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் நடவடிக்கை கைவிடப்பட்டது. மாற்றம் வேண்டும் என தவெக ஆட்சி அமைக்க வாக்களித்த வாக்காளர்கள் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ வரை இந்த தவெக அரசு எந்த மாற்றமும் செய்யாது, ஏமாற்றம் தான் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.


