Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 பெறுவது ஏன்? அமைச்சரிடம் விவசாயிகள் சரமாரி கேள்வி

சேத்தியாத்தோப்பு, ஜூலை 20: சேத்தியாத்தோப்பு அருகே ஆய்வுக்கு வந்த உணவுத்துறை அமைச்சரிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 பெறப்படுவது ஏன்? என விவசாயிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 2 லட்சத்து 75 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனை தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் பாரபட்சம் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ.55 முதல் பணம் பெறப்படுகிறது. கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என கூறினர்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இதனை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக தேவைப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் ஆய்வு மற்றும் அறிவிப்புக்கு பிறகு கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படும், என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.