கடலூர், செப். 18: கடலூர் வன்னியர்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரின் மனைவி சாந்தி, கடலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புகார் மனு அளித்தார். கடலூர் புதுக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவர் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி, ஆட்களை சேர்த்து விட்டால் வருமானம் கிடைக்கும் என கூறினார்.
அதனை நம்பி எனக்கு தெரிந்த 97 நபர்களை சேர்த்து விட்டேன். 1 பவுன் பண்டு சீட்டில் 37 நபர்களிடம் ரூ.19 லட்சத்து 98 ஆயிரம், 4 கிராம் பண்டு சீட்டில் 47 நபர்களிடம் ரூ.14 லட்சத்து 10 ஆயிரம், 6 கிராம் பண்டு சீட்டில் 7 நபர்களிடம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம், ரூ.1500 தீபாவளி பண்டு சீட்டில் 6 நபர்களிடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் கட்டினர். கடந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு முன் நகைகளை கேட்டபோது விஷ்ணுபிரியாவின் அண்ணன் வினயன்(36), அவரது மனைவி ஹசீனா, அவரது தாயார் கல்பனா, அவரது தங்கை வினிதா, பங்குதாரரான குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விக்கி ஆகியோர் தங்கம் விலை அதிகமாகிவிட்டது, பணம்தான் தர முடியும் என கூறினர்.
மேலும் பணத்தையும் தராமல் காலம் கடத்தி வந்தனர். மீண்டும் விஷ்ணுபிரியாவின் முகவரிக்கு சென்று கேட்டபோது அவரது குடும்பத்தினர் திட்டி விரட்டி அடித்தனர். இதனால் வினயன், கல்பனா, ஹசீனா, விஷ்ணுபிரியா, விக்கி ஆகியோர்களிடமிருந்து நாங்கள் கட்டிய ரூ.38 லட்சத்து 10 ஆயிரத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இது தொடர்பாக கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் கடலூர் பகுதியை சேர்ந்த மேலும் பலரிடம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 90,000 வரை மோசடி செய்தது தெரியவந்தது. தீபாவளி பண்டு சீட்டு என்ற பெயரில் மொத்தம் ரூ.1 கோடியே 79 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கோபிக்குமார் தலைமையிலான போலீசார், மோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆணைகுப்பத்தை சேர்ந்த விஜயன் மகன் வினயனை நேற்று கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.


