வாழப்பாடி, அக். 17: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தர்ஷினி (24), சேலம் மேட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர் வாழப்பாடி அய்யாக்கவுண்டர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அவருடன் சேலம் மேட்டூரை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, மாணவிகள் இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளனர். நேற்று காலை, மேட்டூர் மாணவி கண்விழித்து பார்த்தபோது, தர்ஷினி அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
பின்னர், அலறியடித்து வெளியே ஓடி வந்து, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், மாணவி தர்ஷினி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தங்கியிருந்த அறையில், போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு தூக்க மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கிய நிலையில், மாணவி தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை ெசய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், மாணவியின் இறப்பு குறித்து விருத்தாசலத்தில் உள்ள பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, குடும்ப சூழலால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா?, காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


