விருத்தாசலம், செப். 17: விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி இன்று (17ம் தேதி) தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் கடலூர் சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளால் அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேற்கண்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, தேமுதிக கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் இன்று (17.09.2026) டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் தேமுதிக நிர்வாகிகளுக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் உறுதியளித்துள்ளனர்.அதிகாரிகளின் இந்த உறுதிக் கடிதத்தை ஏற்று, இன்று நடைபெறவிருந்த டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக விருத்தாசலம் தொகுதி தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.


