பண்ருட்டி, அக். 16: பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு மற்றும் கீழ்கவரப்பட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 16ம் தேதி விநாயகர் சிலைகளை மினி டிரக்குகளில் ஏற்றிக் கொண்டு தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைப்பதற்காக சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் தங்களது கிராமங்களுக்கு திரும்பினர். இதனிடையே கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற போது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அங்கிருந்த ராமு(45) என்பவர் இரு தரப்பினரையும் விலக்கி சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவரிடம் இருந்த இரும்பு கம்பியை பறித்து அவரது தலையில் தாக்கியதில் ராமு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி குடும்பத்திற்கும், கீழ்கவரப்பட்டில் வசிக்கும் அவரது அக்கா கன்னியாகுமரி குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்னையில் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.
மூர்த்தியின் மகன் விக்னேஷ், கன்னியாகுமரியின் மகன் தேவ் ஆகியோருக்கும் இடையே கடலூரில் ஏற்பட்ட தகராறு விநாயகர் சிலை கரைப்பில் மீண்டும் வெடித்துள்ளது. இந்த வழக்கில் முதற்கட்டமாக மூர்த்தி, அவரது மனைவி அம்பிகா, மகன் விக்னேஷ்(24) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முருகன் மகன் விக்னேஷ்(23) என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


