விழுப்புரம், அக். 16: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநிலப் பொதுச் செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகவும், 5ஏக்கருக்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதியின்படி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக சென்னை தலைமைச் செயலகத்தில் 9 அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது அமைச்சர்களும், அலுவலர்களும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறினர். இதுவரை அரசுசார்பில் 3 முறைகள் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தள்ளுபடி அறிவிப்பு அமையவில்லை. தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை உள்ளிட்டவை இணைந்து, தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி 600 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் அரிசி விலை உயரவில்லை என உணவுத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று பேசுகிறார். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு பெற வேண்டிய காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
டெல்டாவிற்கு வறட்சி நிவாரணம் தேவை
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெல்டா மாவட்டங்கள், தெற்கு, வடக்கு,மேற்கு மாவட்டங்களில் பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


