Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சங்கராபுரம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி பெண் உட்பட 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூன் 16: சங்கராபுரம் அருகே மழையின்போது மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (45), கூலி தொழிலாளி. இவர் தற்போது கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (38), வீட்டில் குழந்தைகளை கவனித்து வருகிறார். ராஜூ தனது வீட்டின் முன்புறத்தில் தகர சீட்டால் கொட்டகை அமைத்திருந்தார். அந்த கொட்டகையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவதற்காக மின் ஒயர் இணைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் அப்பகுதியில் மிதமான மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மின் ஒயரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக கொட்டகையின் தகர சீட்டில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மழை பெய்து கொண்டிருந்ததை அறிந்த செல்வி வெளியில் காயவைத்திருந்த துணிகளை எடுக்க சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் தகர சீட்டில், கை வைத்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்ததால், பக்கத்து வீட்டில் வசித்த செல்வியின் கணவரின் சகோதரரான கணேசன் (43) என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது செல்வி கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தகர கொட்டகையை தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்தார்.

வெளியே சென்ற கணேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சிவகாமி வெளியே சென்று அவரை தேடியபோது செல்வி மற்றும் கணேசன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அவரது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த சங்கராபுரம் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.