Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்எல்ஏவாக அசோக் ஆனந்தன் பதவியேற்றார்: சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 11 லிருந்து 12ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 6ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசோக் ஆனந்தன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேதுசெல்வம் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 9ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்று 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அசோக் ஆனந்தன், நேற்று காலை புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் அறையில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவக்கொழுந்து, ராஜவேலு, ஜி.என். எஸ் ராஜசேகரன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், மோகன்தாஸ், ஐய்யப்பன், ஜான்குமார், வையாபுரி மணிகண்டன், அழகு, சட்டசபை செயலர் தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ பதவியேற்பு விழா சட்டசபை வளாகத்தில் எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற அசோக் ஆனந்தனுக்கு முதல்வர், சபாநாயகர், எம்எல்ஏக்கள், அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.