Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனீக்கள் கொட்டி பள்ளி மாணவர்கள் படுகாயம்: வேப்பூர் அருகே பரபரப்பு

திட்டக்குடி, ஜூலை 15: வேப்பூர் அருகே தேனீக்கள் கொட்டி பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் நடுவே வேப்பமரம் ஒன்று உள்ளது. அதில் இருந்த மலைத் தேன் கூட்டை அங்கிருந்த ஒரு மாணவன் கற்களால் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டில் கல்பட்டவுடன் தேனீக்கள் நாலாபுரமும் பறந்துள்ளது. அப்போது பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை தேனீக்கள் கடித்துள்ளது.

இதில் மாணவர்களின் முகம், கை உள்ளிட்ட பல பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டு அலறினர். தொடர்ந்து தேனீக்கள் கடித்து படுகாயமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மங்களூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர், விருத்தாசலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பள்ளியில் உள்ள வேப்பமரத்தில் இருந்த மலைத்தேனீ கூட்டை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ, முன்னாள் மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுத்தார். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில், சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.