Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விழுப்புரத்தில் பரபரப்பு; பர்னீச்சர் கடை, தையல் கம்பெனியின் பூட்டை உடைத்து ரூ.9.11 லட்சம் பணம் கொள்ளை: அடுத்தடுத்து சம்பவங்களால் வணிகர்கள் பீதி

விழுப்புரம், அக். 14: விழுப்புரத்தில் தையல் கம்பெனி, பர்னீச்சர் கடையின் பூட்டை உடைத்து ரூ.9.11 லட்சம் பணம் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்-செஞ்சி சாலையில் பாபு என்பவருக்கு சொந்தமான பர்னீச்சர் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட நிலையில், கடையினுள் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.11 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையடிக்க வந்தவர்கள் சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் விழுப்புரம் பழைய செஞ்சி ரோடு அபிநயா கார்டனில் நடராஜன் என்பவர் தையல் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்த நிலையில் நேற்று காலை கம்பெனியை திறந்து பார்த்தபோது கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் உதவியுடன் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்தும் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் வணிகர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.