Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மனைவியை விவாகரத்து செய்ததாக போலி சான்றிதழ் பெண்ணை திருமணம் செய்து 30 பவுன், ரூ.40 லட்சம் பணம் மோசடி: நெய்வேலி தனியார் சிட்பண்ட்ஸ் ஏஜென்ட் கைது

நெய்வேலி, ஜூலை 13: மனைவியை விவாகரத்து செய்ததாக போலி சான்றிதழ் கொடுத்து 2வதாக கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த ஏஜென்டை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்தவர் 39 வயது பெண். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது கடந்த 2018ம் ஆண்டு இப்பெண்ணிற்கும், இவரது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெம்புலிங்கம் மகன் செல்வமணி(39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது செல்வமணி நெய்வேலியில் உள்ள தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் செல்வமணி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதற்கான போலி விவாகரத்து சான்றிதழ் காட்டி கணவரை இழந்த பெண்ணை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து 2வதாக திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு செல்வமணி தனது மனைவியிடம் இருந்து 30 பவுன், அவரது தந்தையிடம் ரூ.40 லட்சம் பணம், மேலும் ரூ.62,000 மதிப்பில் இருசக்கர வாகனம், காசோலையும் வாங்கியுள்ளார். தொடர்ந்து மனைவியின் தாயை மிரட்டியும் வீட்டு பத்திரத்தை ரூ.50 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். மேலும் மனைவியிடம் இருந்து 10 காசோலையை பெற்று செல்வமணி அதனை வேறு நபர்களிடம் கொடுத்து டெபாசிட் செய்ய சொல்லியும் பணம் பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ேபாலி சான்றிதழ் காண்பித்து 2வதாக திருமணம் செய்து நகை, பணத்தை வாங்கி ஏமாற்றிய செல்வமணி மீது நெய்வேலி நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின்பேரில், நெய்வேலி நகர போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வமணி முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக போலி சான்றிதழ் காண்பித்து, கணவரை இழந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்து நகை, பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார், செல்வமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் செல்வமணி பல்வேறு சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்து பலரை ஏமாற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதும், பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.