Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தவறான சிகிச்சையால் வாலிபர் பலி: போலி டாக்டரான தவெக பிரமுகர் கைது

சேத்தியாத்தோப்பு, ஜூன் 13: சேத்தியாத்தோப்பில் வாலிபர் இறந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார், போலி டாக்டரான தவெக பிரமுகரை அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மின் நகரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ஆனந்தபாபு(45). தவெக பிரமுகரான இவர் சேத்தியாத்தோப்பில் மெடிக்கல் வைத்துள்ளார். மேலும் மருத்துவம் படிக்காமலேயே, ஊசி போட்டு நோயாளிகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பு.ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் ராகுல்(24) என்பவர், பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடிய நிலையில், அவரை ஆனந்த்பாபு நடத்தும் மெடிக்கலுக்கு நேற்றுமுன்தினம் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே ராகுலுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால்தான் அவர் இறந்து விட்டதாக பெற்றோர், உறவினர்கள் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தை நேற்றுமுன்தினம் இரவு முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த்பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று போலி டாக்டர் ஆனந்த்பாபு மற்றும் மெடிக்கலில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இறந்த ராகுலின் உடல், சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீசார் முன்னிலையில் மெடிக்கலுக்கு சுகாதார துறையினர் சீல் வைத்தனர்.