Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மகளின் திருமண செலவுக்கு கடன் வாங்கிய முதியவரிடம் சொத்து மோசடி

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டையை சேர்ந்தவர் குமாரசாமி(65). இவர் கடந்த 2022ல் தனது மகளின் திருமண செலவுக்காக, காமராஜர் நகரில் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கடன்பெற முடிவு செய்தார். இதற்காக லாஸ்பேட்டையை சேர்ந்த கண்ணன் மகன் கணேஷ் என்பவரை அணுகியுள்ளார். அப்போது கணேஷ் ரூ.30 லட்சம் கடனாக வழங்குவதாகவும், அதற்கு ஈடாக குமாரசாமியின் நிலத்துக்கு பொது அதிகாரப்பத்திரம் வழங்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும், 11 மாதங்களுக்குள் அசல் தொகை மற்றும் வட்டியை செலுத்தினால் ஆவணங்களை ரத்து செய்து விடுவதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய குமாரசாமி, கணேஷிடம் இருந்து ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு பொது அதிகார பத்திரத்தை வழங்கியுள்ளார். பின்னர், தனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தை விற்பனை செய்து கிடைத்த தொகையில் இருந்து ரூ.24 லட்சத்தை கணேஷிடம் திருப்பி செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை ஆவணங்களை ரத்து செய்யும்போது வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கணேஷ் வெளிநாட்டில் இருப்பதாக கூறி புதுச்சேரிக்கு வராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், மேற்கண்ட சொத்துக்கான தண்ணீர் வரியை தனது பெயருக்கு மாற்றுவதற்காக உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு குமாரசாமி சென்றார். அப்போது வில்லங்க சான்றிதழை சரிபார்த்தபோது, அந்த சொத்து கணேஷின் தாயார் பார்வதி பெயரில் இருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார்.

இந்த மோசடிக்கு கணேஷின் கூட்டாளிகள் சிலரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக கணேஷை, குமாரசாமி தொடர்பு கொண்டபோது உரிய பதில் அளிக்காமல் நழுவியதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமாரசாமி, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கணேஷ் மற்றும் அவரது தாயார் பார்வதி உள்ளிட்ட கும்பல் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.