பாகூர், செப். 11: பாகூர் அருகே உள்ள விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலையில் இருபுறமும் செல்லும் பாசன வாய்க்காலில் மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டி வருவதாக பாகூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பாகூர் - கன்னியகோயில் சாலை, விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மர்ம நபர் ஒருவர் செப்டிக் டேங்க் கழிவுகளை அங்கிருந்த பாசன வாய்க்காலில் கொட்டியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சந்திரசேகர் என்ற விவசாயி இதுகுறித்து தகவலை பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு போலீசார் சென்று அவரையும் செப்டிக் டேங்க் கழிவு நீர் லாரியையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை செய்த போது, கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த செந்தமிழன் (20) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து, கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்தனர்.


