கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தார்; செஞ்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சென்னை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
விழுப்புரம், அக். 10: செஞ்சியில் சிறுமியை கடத்தி கட்டாய குழந்தை திருமணம் செய்து பலாத்காரம் செய்த சென்னை வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வினோத் குமார்(32) என்பவர் கடந்த 2020 ஏப்ரல் 13ம் தேதி கடத்திச் சென்று கட்டாய குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட வினோத்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


