Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தேர்தல் துறை வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

கடலூர், அக். 10: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, விருத்தாசலம் தொகுதி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளேன். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்காரெட்டிகுப்பம் மற்றும் ராஜேந்திர பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மோசமான நிலையில், மாசடைந்துள்ளது. பாட்டிலில் கொண்டு வந்திருந்த குடிநீரை ஆட்சியரிடம் காண்பித்தேன். அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதல்வரின் புகைப்படம் மோசமான நிலையில் உள்ளது. முதல்வருக்கே இந்த நிலைமை. தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் பாதுகாத்து பராமரிக்கப்பட வேண்டும். முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் கடனில் உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் இலவசம் என்று கொண்டு வந்த திட்டம், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும் இலவச பயணம் என்று அறிவிக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதை நான் வரவேற்கிறேன். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும். அதில் முறைகேடுகள் நடப்பதாக பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தேர்தல் துறை மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் முறைகேடுகள் நடைபெறுவதை முழுமையாக தடுக்கலாம் என்று தெரிவித்தார்.