கடலூர் பேருந்து நிலையம் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை
கடலூர், செப். 10: கடலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் நகைக்காக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் அடிவார பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி கலா (60). கணவரை இழந்த இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்பு தேடி கடலூர் வந்து குடியேறினார். தற்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலி நகரில் உள்ள புறம்போக்கு இடத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கலா, அப்பகுதியில் தங்க நகைகள் செய்யும் பகுதியில் இருந்து மணல்கள் எடுத்து வந்து அதை தண்ணீர் ஊற்றி அலசி அதில் கிடைக்கும் சிறுசிறு நகை துகள்களை வாரத்தில் 1 கிராம் வரையிலும் சேர்த்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் கலா தரையில் பாய் போட்டு படுத்து தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை அவர் காது, மூக்கு பகுதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் படுத்த படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது வீட்டு கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மூதாட்டி கலாவின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் எஸ்.பி. உத்தரவின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கலா சிறுசிறு நகை துகள்களை வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாகவும், அவைகள் மாயமாகி இருப்பதாகவும், அதன்படி நகைக்காக அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


