இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வீடுகளை இடிக்க வந்த என்எல்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தம் கரிவெட்டி கிராமத்தில் பரபரப்பு
சேத்தியாத்தோப்பு, செப். 10: கரிவெட்டி கிராமத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, இழப்பீடு உள்ளிட்டவற்றை வழங்காமல் வீடுகளை இடிக்க வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தியது. இதில் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பாலமுருகன், வினிதா சிவப்பிரகாசம், ஜெகஜோதி செம்புலிங்கம் ஆகியோரது வீடுகளுக்கான வாழ்வாதார பாதுகாப்பு தொகை, வேலைவாய்ப்பு, இழப்பீடு உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை என்எல்சி அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி ராமலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்துடன் வீடுகளை எடுக்க சென்றபோது தங்களுக்கு வாழ்வாதாரம், மற்றும் வேலை வாய்ப்பு, இழப்பீடு உள்ளிட்டவற்றை வழங்கினால் மட்டும் வீடுகளை இடிக்க அனுமதிப்போம்.
மேற்கண்ட கோரிக்கைகளை வழங்கி விட்டு குடியிருப்புகளை இடித்துக் கொள்ளலாம் என கூறி அங்கேயே முற்றுகையிட்டனர்.என்எல்சி நிர்வாகம் எங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் எங்களை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விசாரணை செய்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மாலையில் 3 பேரின் வீடுகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


