புதுச்சேரி, செப். 10: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளராக சேதுசெல்வம் போட்டியிடுவார் என திமுக தலைமைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாளில் வேட்பு மனுதாக்கல் செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக சேது (எ) சேதுசெல்வம் திமுக தலைமைக்கழகத்தால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சேதுசெல்வம் முறைப்படி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது திமுக மாநில அமைப்பாளர் சிவா, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேதுசெல்வம், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகினார். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.
அப்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியை எதிர்த்து தீவிரமாக களமிறங்கி 7,500க்கும் மேல் வாக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார். இதுவரை 3க்கும் மேற்பட்ட முறை தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளராக சேதுசெல்வம் போட்டியிட்டுள்ளார். இதனால் தொகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர். இந்த முறை திமுக சார்பில் சேதுசெல்வம் போட்டியிட இருப்பதால் தட்டாஞ்சாவடி தொகுதியில் கட்சிகளிடையே பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் போட்டியிடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஏற்கனவே தொகுதியில் நன்கு பரிச்சையான அவர், தொகுதி முழுவதும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். மேலும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி சார்பில் நேயம் மக்கள் கழகத்ைத சேர்ந்த விநாயகம் களமிறங்க உள்ளார். மேலும் இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என அவர்களது தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


