புதுச்சேரி, அக். 9: வீட்டின் கதவை உடைத்து, ரூ.7.35 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஏனாம் பிராந்தியம் கனகலபேட்டா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோலா ராமகிருஷ்ணா(40). இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைக்காக கடந்த 5ம் தேதி காக்கிநாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, வீட்டை பூட்டி கொண்டு தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மறுநாள் 6ம் தேதி மாலை வீட்டின் உரிமையாளர் அடபா ரவி அங்கு சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக ராமகிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கோலா ராமகிருஷ்ணாவின் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் படுக்கையறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், அங்கிருந்த இரும்பு அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 42 கிராம் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் என ரூ.5.35 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.1.85 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், வீட்டின் மற்றொரு படுக்கையறையில் இருந்த இரும்பு பெட்டகத்தையும் உடைத்து, அதிலிருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7.35 லட்சம் ஆகும். இது குறித்து கோலா ராமகிருஷ்ணாவின் சகோதரி கனகலா பிரசன்னா வீர வெங்கட நாக பல்லவி (38), ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


