Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசுக்கு எதிராக கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்

புதுச்சேரி, ஜூன். 9: புதுவை அருகே கடலில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பட்டியலின மக்கள் மயானத்தை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் இடையே பிரச்னை இருந்து வருகிறது. பட்டியலின சமூக மக்கள் நடுக்குப்பம் கடற்கரையை ஒட்டியுள்ள மயானத்தை பயன்படுத்துகின்றனர். அதே இடத்தை மீனவர்களும் படகு நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த 6ம் தேதி பட்டியல் சமூகத்தினரின் சடலத்தை புதைக்க, மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் கடலுக்குள் சென்றாலும், சட்டத்தின் முன்நிறுத்துவோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வன்னிஅரசு பட்டியலினத்தவருக்கு சாதகமாக செயல்படுகிறார். தமிழக அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது எனக்கூறி மீனவ பெண்கள் நேற்று காலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆண்கள் அனைவரும் வானூருக்கு சென்ற நிலையில், கிராமத்தில் உள்ள பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய பெண்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி கடலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். மயக்கம் அடைந்த பெண்களை உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வானூர் தொகுதி எம்எல்ஏ கவுதம் திராவிட மணி நேற்று கோட்டக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இரு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டுள்ளோம். இரண்டு சமூக மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரண்டு சமூகத்தினர் இடையே சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் அழைத்து பேசி தீர்வு காணப்படும். இதுபோன்ற பிரச்னைகள் விரும்பத்தகாதவை. மேலும் ஜூன் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்னையை எழுப்பவுள்ளேன், என்றார்.