விழுப்புரம், அக். 8: விழுப்புரத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி தனது அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகாலம் முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவி வகித்ததையொட்டி அவரின் பொதுவாழ்க்கை சேவையை சிறப்பிக்கும் வகையில் பாஜ சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அக்கட்சி சார்பில் நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பாஜகவினர் சேவா ஜோதி யாத்திரை நடத்தி வருகின்றனர். நேற்று விழுப்புரம் மாவட்ட பாஜ சார்பில் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில துணை தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட தலைவர்கள் தர்மராஜ், விநாயகம் உள்ளிட்டவர்கள் தலைமையில் சேவா ஜோதி யாத்திரை தொடங்கியது.
கட்சி அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வரை ஜோதியை ஏந்தியவாறு யாத்திரையாக வந்த அவர்களை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் பாதியில் வழிமறித்து யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாஜகவினர் பிரதமரின் யாத்திரை நிகழ்ச்சிக்கே தடை விதிப்பதா என கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போலீசாரின் அனுமதி மறுப்பை கண்டித்து விழுப்புரம்-சென்னை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதை தொடர்ந்து பாஜகவினர் நகராட்சி திடலில் ஜோதியை வைத்து உறுதிமொழி ஏற்றுவிட்டு அங்கிருந்து சென்றனர்.


