Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்ணீர் திறக்காததால் வறண்டு வரும் வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில், ஜூலை 8: தண்ணீர் வறண்டு வரும் வீராணம் ஏரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மிகப்பெரிய நீர் நிலையான வீராணம் ஏரி, சோழர் காலத்தில் விவசாய பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். சுமார் 11 கி.மீ. நீளம், 5.6 கி.மீ. அகலம் மற்றும் 47.50 அடி முழு நீர்மட்டம் கொண்ட இந்த ஏரி, ஒருகாலத்தில் கடல்போல் காட்சியளித்து, கடலூர் மாவட்ட விவசாயத்திற்கும், சென்னையின் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கியது. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜூன் மாதத்திலேயே கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் போதிய அளவில் தண்ணீர் வழங்கப்படாததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாகவும் குறைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனுடன் கடுமையான வெயில் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் நீண்டகாலமாக முறையாக தூர்வாரப்படாததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒருகாலத்தில் ஆண்டுக்கு பலமுறை நிரம்பிய வீராணம் ஏரி, தற்போது பெரும்பாலான நாட்களில் வறண்ட நிலையையே சந்திக்கிறது. இதன் விளைவாக மூன்று போக விவசாயம் நடைபெற்ற பகுதிகள், தற்போது ஒரு போக சாகுபடியையே சிரமத்துடன் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏரியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, அதை விவசாயிகள் பயன்படுத்த அனுமதித்தால் ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பதோடு, விவசாயத்திற்கும் அரசுக்கும் பயன் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், தூர்வாரும் பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மேலும், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இயற்கை ஊற்றுகள் மறைந்ததுடன், வீராணம் ஏரியின் நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒருகாலத்தில் தினமும் சுமார் 180 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு வழங்கிய வீராணம் ஏரி, இன்று தனது இருப்பையே காக்கப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள், நீர்வள நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், வறண்டு போவது வீராணம் ஏரி மட்டுமல்ல, அதை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமும்தான் என விவசாயிகள் கூறுகின்றனர்.