Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு சி.வெ.கணேசன் எம்எல்ஏ கடிதம்

திட்டக்குடி, செப். 7: திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் ஒன்றிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏ சி.வெ.கணேசன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த 2025-26ம் ஆண்டு மொத்தம் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது 16 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் நடைபெறாமல் மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வயல்களிலும், களங்களிலும் பாதுகாப்பின்றி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு வரப்பட்டு நல்லூர் ஒன்றிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு உணவுத்துறை அமைச்சர், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இருப்பினும் இதுவரை அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படாததாலும், திறக்கப்பட்ட சில நிலையங்களிலும் கொள்முதல் நடைபெறாததாலும் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். தற்போது மழை பெய்யும் சூழ்நிலை காரணமாக கொள்முதல் செய்யப்படாமல் வயல்களிலும், களங்களிலும் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்து தரம் பாதிக்கப்பட்டு வீணாகும் அபாயம் உள்ளது.

இதனால் விவசாயிகள் பல மாதங்களாக மேற்கொண்ட உழைப்பிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தாங்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நல்லூர் ஒன்றியப் பகுதிகளில் கடந்த ஆண்டு செயல்பட்ட 30 நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாகத் திறக்கவும், ஏற்கனவே திறக்கப்பட்டும் கொள்முதல் நடைபெறாமல் மூடப்பட்டுள்ள நிலையங்களில் உடனடியாக நெல் கொள்முதல் பணியைத் தொடங்கவும் உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.