Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரங்கசாமியுடன் டெல்லி செல்வேன் வளர்ச்சி திட்டங்களுக்கான கோப்புகளை நிறுத்தி வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி, ஜூன் 6: புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்காக நானும், முதல்வரும் டெல்லி சென்று ஒப்புதல் பெற்று வருவோம் என்றும், வளர்ச்சி திட்டங்களுக்கான கோப்புகளை தேவையின்றி நிறுத்தி வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வளர்ச்சிக்கான ஆலோசனை குழு கூட்டத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியுள்ளார். புதுச்சேரி மாற்றத்துக்கான ஆலோசனை குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி பேசியதாவது:

புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்காக, நானும், முதல்வரும் டெல்லி சென்று ஒப்புதல் பெற்று வருவோம். புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், நம்முடைய விதிமுறைகளை எளிமையாக மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டு இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது அரசுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் தனியார் பங்களிப்பும் வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கான கோப்புகள் வரும்போது, அதனை அதிகாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. இந்த அதிகாரத்தை அதிகாரிகளுக்கு யார்? கொடுத்தது. தேவையில்லாமல் கோப்புகளை நிறுத்தி வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் சுற்றுலா வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புள்ளது. இதனை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை கவர்னர், முதல்வர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் விவகாரத்தில் முதல்வரின் பரிந்துரையை நிராகரித்தது, மதுபான தொழிற்சாலை துவங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட காரணங்களால் கவர்னர் மீது முதல்வர் அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் காரணமாக, சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்யாமல் முதல்வர் ரங்கசாமி இழுத்தடித்து வந்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக தலைமை முதல்வர் ரங்கசாமியை சமாதானம் செய்து கூட்டணியை உறுதி செய்தது. அதன்பிறகு, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தே.ஜ. கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஏற்கனவே முதல்வருடன் இணக்கமாக செயல்படுமாறு கவர்னருக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக, சட்டமன்ற தேர்தலின்போது, முதல்வர் அனுப்பிய அனைத்து கோப்புகளுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைந்துள்ள நிலையில் நேற்று நடந்த புதுச்சேரி மாற்றத்துக்கான வளர்ச்சி ஆலோசனை குழு கூட்டத்தில் முதல்வருடன் இணக்கமாக செயல்படுவேன் என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்னர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.