கடலூர், நவ. 5: கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் நகரை சேர்ந்தவர் ராஜா மகன் ரூபன் (20). இவர் கடந்த அக்டோபர் 18ம் தேதியன்று தனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் கம்மியம்பேட்டை அருகே உள்ள பி.ஆர்.எஸ். நகர் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம் (26), சதீஷ் (எ) ஹரிதாஸ் (25), முத்து ஆகிய 3 பேரும், ரூபனின் கழுத்தில் அணிந்திருந்த செயினை கேட்டு மிரட்டியுள்ளனர். செயினை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவர் அணிந்திருந்த சுமார் 2.5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ரூபன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜீவானந்தம், ஹரிதாஸ் மற்றும் முத்து ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கைது செய்யப்பட்ட ஜீவா மற்றும் சதீஷ் ஆகிய இருவர் மீதும் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் சரித்திர குற்றப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், திருப்பாதிரிபுலியூர் மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, திருப்பாதிரிப்புலியூர் காவல் இன்ஸ்பெக்டர் கதிரவன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவானந்தம் மற்றும் ஹரிதாஸ் ஆகிய இருவரிடமும் மாவட்ட ஆட்சியரின் தடுப்பு காவல் உத்தரவை வழங்கினார்.


