கீழ்வேளூர், நவ.5: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உருவாக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழகம்-புதுச்சேரி மாநில எல்லை பகுதியான நாகப்பட்டினம் அருகில் உள்ள வாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்து செல்லும்போது நிலக்கரி துகள்கள் பரவுவதால், சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகளை களைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


