Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

புவனகிரி அருகே அண்ணன், தம்பி படுகொலை; தந்தை, 3 மகன்கள் உள்பட 6 பேர் கைது

புவனகிரி, ஆக. 5: புவனகிரி அருகே அண்ணன், தம்பி கொலையில் தந்தை, 3 மகன்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலகிருஷ்ணன்(43). ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன்(37). அண்ணாமலையும், ராமச்சந்திரனும் சகோதரர்கள். இவர்களது மகன்களான இவர்கள் இருவரும் பால்வார்த்துண்ணான் கிராமத்தில் வசித்து வந்தனர். பாலகிருஷ்ணன் அரசு பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தார். ராமகிருஷ்ணன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும் வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சத்திரம், பால் வார்த்துண்ணான் கிராமம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து உயிரிழந்த பாலகிருஷ்ணனின் மனைவி சித்திரைபிரியா, புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை அவரது மகன்கள் பாண்டியன் என்கிற கனகராஜ் (30), தேவராஜ்(36), மதுரை என்கிற யுவராஜ் (32) மற்றும் மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(35), வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்கிற ராமஜெயம் ஆகிய 6 பேர் மீதும், அடையாளம் தெரியாத 4 பேர் என 10 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.