சிதம்பரம், செப். 5: பல் வலிக்கு வந்த பெண்ணுக்கு அரியவகை மரபணு நோய் நீர்கட்டிகள் இருந்ததால் டாக்டர்கள், வெற்றிகரமாக அகற்றினர். கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த 39 வயது பெண் பல் வலி சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். கதிரியக்க பரிசோதனையில் மேல் தாடை மற்றும் கீழ்தாடையில் நீர் கட்டிகள் இருப்பது தெரிந்தது. நோயாளியின் இரு தாடைகளிலும் அதிக எண்ணிக்கையில் நீர்க்கட்டிகள் இருந்ததால் கோர்லின்-கோல்ட்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் அரிய மரபணு சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோயாளியின் அறிவுசார் குறைபாடு மற்றும் இரு தாடைகளிலும் காணப்பட்ட பல நீர்க்கட்டிகளின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு வாய்வழி மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சைத்துறை சார்பில் சிகிச்சை திட்டம் தயாரிக்கப்பட்டது.
மருத்துவர் தங்கவேலு தலைமையில் மயக்கவியல் நிபுணர் சந்தோஷ் மாதவன், இணைப் பேராசிரியர் ஜனார்த்தனன், உதவிப் பேராசிரியர் உமா மகேஸ்வரன், முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மாணவர் விக்னேஸ்வரி, செவிலியர் ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றினர். பல்வேறு பகுதிகளில் நீர்க்கட்டிகள் காணப்பட்ட போதிலும், அறுவை சிகிச்சை எவ்வித பெரிய சிக்கலும் இன்றி வெற்றிகரமாக நடைபெற்றது. முக்கியமாக, நோயாளிக்கு வழங்கப்பட்ட முழுமையான சிகிச்சை அரசு மருத்துவ சேவையின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், சிக்கலான தாடை நோய்க்கு தேவையான சிறப்பு அறுவை சிகிச்சையை நோயாளி பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் நோயாளி குணமடைந்து பல் வலி மற்றும் வீக்கம் இல்லாமல் நலமாக உள்ளார்.


