Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

புதுச்சேரி, செப். 5: சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராகினார். தவெக கட்சி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த அண்ணன் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். மரிய வில்சன் கொலை மிரட்டல் விடுத்த காணொலி தேர்தல் சமயத்தில் வைரலாக பரவியது. இச்சம்பவத்தில் காயமடைந்த மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்துக்கு சேதம்‌, ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரியவில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்வதற்காக ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன் சமரச தீர்வு மையம் மூலம் இரண்டு தரப்பினரும் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த நிலையில், சமரச முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிதியமைச்சர் மரிய வில்சன், இங்கிலாந்து அரசரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் கொடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதற்கு மரியவில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவார் என்று உறுதியளித்தார். இதற்கிடையே அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 31ம் தேதி நீதிபதி சந்திரசேகர் (பொறுப்பு) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி இருந்தார். அப்போது மரியவில்சன் நீதிமன்றத்தில் ஆஜராவது கட்டாயம் என தெரிவித்து, இந்த வழக்கை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வந்தது. இதில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜரானார். தொடர்ந்து, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகலை அமைச்சர் மரிய வில்சன் பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி சந்திரசேகர் வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.