மயிலம், நவ. 3: அமைச்சரவையில் இருந்தாலும் முதல்வர் விஜய் அரசை கவிழ்க்க விசிகவினர் சதி செய்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் கூறினார். திண்டிவனம் அருகே மயிலத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாவளியை முன்னிட்டு நடந்த குடும்பத் திருவிழாவில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கவலைக்குள்ளாகியுள்ளது. செஞ்சியில் சிறுமி மாயமாகி 25 நாட்களுக்கு மேல் ஆகியும் முன்னேற்றம் இல்லை. தமிழகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆயிரம் கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ளார். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை உள்ளது.
மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாத கரப்பான் பூச்சி கட்சிகள், கம்யூனிஸ்டுகள், நாடு முழுவதும் தோற்ற காங்கிரஸ் ஆகியோர் தேர்தல் ஆணையரை பதவி விலக கூறுவது தவறு. ராகுல் காந்தியை ராகுல் ஈ.வெ.ரா என்று மாணிக்கம் தாகூர் கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இருந்தாலும் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசாங்கத்தை கவிழ்க்க வெளியே சதி செய்கின்றனர். பாமக எப்போதும் அங்கு போக ரெடியாக உள்ளது. சனாதனத்தை அழிப்போம்’ என்று அமைச்சர் வன்னியரசு பேசுவதை கண்டிக்கிறோம். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தவெகவை கிறிஸ்தவ மிஷனரிகள் கையில் இருந்து விடுவிக்க வேண்டும், என்றார்.


