Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விருத்தாசலத்தில் கனமழை; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

விருத்தாசலம், ஆக. 3: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஏனாதிமேடு, பரவலூர், கோமங்கலம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றியுள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல்லை இந்த நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

இதனால், பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி நனைகின்றன. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக பரவலூர், கோமங்கலம் மற்றும் ஆலிச்சிக்குடி ஆகிய 3 கிராமங்களிலும் சேர்த்து சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி, பல போராட்டங்களுக்கு மத்தியிலும், புயல் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களை கடந்துதான் பயிர் செய்து அறுவடை செய்கிறோம். ஆனால், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்வதில்லை.

தற்போது மழையில் நனைந்துள்ள நெல் மணிகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, நனைந்த நெல்லை தாமதமின்றி விலை குறைக்காமல் உரிய விலைக்கே உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.