Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஒரு நாள் தலைமையாசிரியரான மாணவர்கள் முதல் மதிப்பெண், நூறு சதவீத வருகை பதிவு

புதுச்சேரி, ஜூன் 3: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் முதல் நாளே பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட விலையில்லா எழுது பொருட்களும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. புதுச்சேரி நகர பகுதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஹரிகரன் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதால், அவரை கவுரவிக்கும் வகையிலும், உப்பளம் பகுதியை சேர்ந்த மாணவன் ‌ஜோஸ்வா நூறு சதவீதம் வருகை புரிந்ததற்காக பாராட்டும் வகையிலும் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்து பாராட்டப்பட்டனர்.

பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்கள் ஹரிஹரன், ஜோஸ்வாவுக்கு வட்ட துணை ஆய்வாளர் -2 செல்வி, பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இது குறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியர்கள் கூறும்போது, ‘முதல் மதிப்பெண் எடுத்ததால் தன்னை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு கொடுத்து கவுரவப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது என்னை போன்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும்’ என்றும் குறிப்பிட்டார்.