புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ கிறிஸ்ட் ஆனந்த் (44), அவரது மனைவி அனிதா (43) ஆகியோர் இணைந்து, புதுச்சேரி நேரு வீதியில் EL ROI TRADING SERVICES என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், தினசரி மற்றும் மாதாந்திர வட்டி வழங்கப்படும் என்றும் கூறி முதலீடுகளை பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி திலகர் நகரை சேர்ந்த வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணனின் மனைவி விஜயமேரி (47), கடந்த 2022ம் ஆண்டு நேரு வீதியில் உள்ள ஆண்ட்ரூ கிறிஸ்ட் ஆனந்தின் நிறுவனத்துக்கு சென்று முதலீடு தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது ஆண்ட்ரூ கிறிஸ்ட் ஆனந்த் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இதனை நம்பிய விஜயமேரி, பல தவணைகளில் சுமார் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் முதலீட்டு தொகைக்கு லாபம் வழங்கியதால், தம்பதியினர் மீண்டும் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி விஜயமேரி தொடர்ந்து பணத்தை முதலீடு செய்துள்ளார். இதற்கிடையே, தங்களது நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி கூடுதல் தொகையை பெற்றுள்ளனர்.
மேலும், ஒரு மாதத்துக்குள் பணம் முழுவதையும் திருப்பி தருவதாக கூறி விஜயமேரியிடமிருந்து 7.5 சவரன் தங்க நகைகளையும் பெற்றுள்ளனர். இவ்வாறு மொத்தம் ரூ.79 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 7.5 சவரன் தங்க நகைகளை பெற்றுள்ளனர். ஆனால், முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத் தொகையையும் திருப்பி தராமல் தம்பதியினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து விஜயமேரி கேட்டபோதும் முறையான பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே, இருவரும் தங்களது நிறுவன அலுவலகத்தை மூடிவிட்டு, குடியிருந்த வீடுகளையும் விற்பனை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயமேரி, இச்சம்பவம் தொடர்பாக மக்கள் மன்றத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோரிமேடு போலீசார், ஆண்ட்ரூ கிறிஸ்ட் ஆனந்த் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.


