Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு நான்கரை ஆண்டுகளில் ரூ.3,606 கோடி திட்டங்கள்

கோவை,நவ.25:தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நான்கரை ஆண்டுகளில் ரூ.3,606 கோடி மதிப்பிலான திட்டங்கள், அவரின் கோவை பயணத்தின் போது மக்களுக்கு கிடைத்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இதுவரை நான்கரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 15 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை வழங்கி கோவை மாவட்ட வளர்ச்சியில் மாபெரும் பங்காற்றியுள்ளார். இதன் மூலம் ரூ.3,606 கோடி மதிப்பிலான திட்டங்கள் கோவை மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக 29.5.2021 அன்று கொரோனா ஆய்வுப் பணிக்காக கோவைக்கு வருகை தந்தார். அப்போது சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பி.பி.இ. பாதுகாப்பு ஆடையுடன் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ் வீதம், 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் 30.5.2021 அன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு செயலர்கள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கோவைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.11.2021 அன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 587.91 கோடி மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.மேலும் ரூ.89.73 கோடி மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25,123 பயனாளிகளுக்கு ரூ. 646.61 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

23.11.2021 அன்று கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 19.5.2022 அன்று கோவை ரெசிடென்ஸி ஹோட்டலில் தொழிலதிபர்கள் மற்றும் கூட்டமைப்பினருடன் அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதையடுத்து 24.8.2022 அன்று ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட விழாவில் 81,486 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 11.3.2023 அன்று கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார். 18.12.2023 அன்று ஆவாரம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, அடிக்கல் நாட்டினார்.

பின்னர் 13.3.2024 அன்று பொள்ளாச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 19,329 பயளாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 9.8.2024 அன்று கோவை அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். 5.11.2024 அன்று விளாங்குறிச்சியில் ரூ. 158 கோடியே 32 லட்சம் செலவில் 2,94 இலட்சம் சதுர அடி பரப்பளவிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட 468.89 ஏக்கர் நிலங்களுக்குரிய ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். மேலும் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்படும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

6.11.2024 அன்று அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.இதேபோல பொள்ளாச்சி நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு சி.சுப்பிரமணியம் வளாகம் என்று பெயர் சூட்டி, அங்கு பெருந்தலைவர் காமராசர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் சிலைகளைத் திறந்து வைத்தார். ஆழியாறு அணை கட்டுமானத்தின்போது உயிர்நீத்த தியாகிகள் நினைவு மண்டபம் திறந்து வைத்தார். 9.10.2025 அன்று கொடிசியா வளாகத்தில் புத்தொழில் மாநாட்டினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை - 2025 அறிக்கைகளை வெளியிட்டார். கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையிலான ரூ.1,791 கோடி செலவில் தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கி.மீ. நீளம் கொண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார்.

பின்னர் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126.12 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.1,164 கோடியில் 243 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதேபோல ரூ.1,042 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் ரூ.1,400 கோடியில் 1,33,883 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கியுள்ளார். இதனால் கோவை மாவட்டம் பல்வேறு திட்டங்களையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.