கோவை, ஆக. 28: கோவை மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தரம் பிரித்தல், ஏல நடைமுறை உள்ளிட்ட முழு செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் கோவை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், அன்னூர், ஆனைமலை, கோவை, காரமடை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், மலையடிப்பாளையம், சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 10 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பாலமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை விற்பனைக்குழுவிற்கு அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (eNAM) செயல்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் பிற மாவட்ட விவசாயிகளும் மின்னணு முறையிலான ஏலத்தில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அதிக போட்டி மற்றும் மறைமுக ஏலம் காரணமாக இத்திட்டத்தின் கீழ் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. விற்பனை குழுவின்கீழ் இயங்கி வரும் 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 30,405 மெ.டன் கொள்ளளவு கொண்ட 35 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அறுவடை காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகமாக இருக்கும்போது விலை குறைவாக இருப்பதால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகளில் மிக குறைந்த வாடகையில் இருப்பு வைத்து, விலை உயரும்போது விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை, 5 சதவீத வட்டி விகிதத்தில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. 2026-27ம் ஆண்டில் மட்டும் பொருளீட்டு கடனாக ரூ.10 கோடி வழங்க அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 66 விவசாயிகளுக்கு ரூ.284 கோடி பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக ரூ.283.20 கோடி மதிப்பிற்கு 90,460.188 டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதன்மூலம், 12194 விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக பயனடைந்துள்ளனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தேங்காய், கொப்பரை உள்ளிட்ட விளைபொருட்களை உலரவைப்பதற்கு 30 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி அதிகமாக உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகள் உடைக்கும் தேங்காயை விரைவாக உலரவைத்து கொப்பரையாக மாற்றுவதற்கு சூரிய உலர்த்திகள் அமைக்கப்பட்டு, கட்டணமின்றி அப்பகுதி விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தமிழ்நாட்டிலேயே கொப்பரைக்கான முதன்மையான மின்னணு வேளாண் சந்தையாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



