கோவை, செப்.5: கோவை மாவட்டம் பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சி துறை செயல்பட்டு வருகிறது. இந்த மைய வளாகத்தில் பட்டுக்கூடு ஏலம் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நடைபெற்று வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக பட்டுக்கூடு வரத்து பெருமளவு குறைந்து விட்டது. பட்டு புழுவிற்கு உணவாக வழங்கப்படும் மல்பெரி சாகுபடி பாதிப்பு மற்றும் கடும் வெப்பத்தால் புழுக்கள் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் பட்டுக்கூடு வரத்து குறைந்து விட்டது. இதையடுத்து நல்ல தரமான பட்டுக்கூடுகள் அதிக விலைக்கு ஏலம் சென்றன.
கோவை பட்டுக்கூடு ஏல மையத்தில் நேற்று முன் தினம் முதல் முறையாக 1 கிலோ பட்டுக்கூடு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘கோவை ஏல மையத்திற்கு வழக்கமாக நாள்தோறும் 1 டன் அளவிற்கு பட்டுக்கூடு ஏலத்திற்கு வரும். ஆனால் காலநிலை மாற்றம் மழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக நாள் ஒன்றுக்கு 300 கிலோ முதல் 600 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் பட்டுக்கூடு விலை அதிகரித்து வருகிறது. ஏல மையத்தில் நல்ல தரமான பட்டுக்கூடு 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ரூ.780-க்கும் ஏலம் சென்றது. சராசரியாக 1 கிலோ ரூ.928க்கு பட்டுக்கூடு ஏலம் சென்றது. இந்த விலையேற்றம் இன்னும் சில வாரங்களுக்கு இருக்கும்’’ என்றனர்.


