கோவை, செப். 29: கோவையில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டின்பேரில், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வடமதுரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அவர்களுக்கு தேவையான ெபாருட்களை வழங்கி, பாரம்பரிய முறைப்படி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ நடத்திவைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல, அவருடைய கணவன் மற்றும் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது. பொதுவாக 7-வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியமும் முக்கியம். அனைத்து வகையிலும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
