கோவை, செப். 29: கோவை மாநகரில் பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாத காரணத்தால், நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இதன்காரணமாக, குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அடுத்து மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை உள்ளது. இங்கு மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, நாளுக்கு நாள் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை சார்பில், தெருமுனைகள், முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். குற்ற வழக்குகளில் துப்பு துலக்க சிசிடிவி கேமராவை ஆய்வு செய்யும்போது, சில நேரங்களில் இருட்டான பகுதிகளில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதற்கு காரணம், மாநகராட்சி சார்பில் பொருத்தப்படும் தெருவிளக்குகள் பல இடங்களில் பழுதாகி இருப்பதுதான். மேலும், இதனை சீரமைக்காத காரணத்தால், நகரம் இருளில் மூழ்கி விடுகிறது. சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் உருவம் பதிந்திருந்தாலும், இருட்டு காரணமாக அவர்கள் யார்? என்பது குறித்த தெளிவான விவரத்தை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. மாநகரில் சில இடங்களில் மாதக்கணக்கில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், மக்கள் இரவில் நடந்துசெல்லவே அச்சப்படுகின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்த குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே கோவை நகரில் தற்போது உள்ள தெருவிளக்குகளை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா கூறியதாவது:
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் சேர்த்து 100 வார்டுகளில் தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரம் தெருவிளக்குகள் உள்ளன. நகரம் முழுவதும் இந்த தெருவிளக்குகளை பராமரித்து வரும் ஒப்பந்ததார்கள், பராமரிப்பு பணிகளை முறையாக கையாள்வதில்லை என புகார்கள் வருகிறது.
இதனை நிவர்த்தி செய்ய, இந்த பணிக்கு மற்றொரு நிறுவனத்தை ஈடுபடுத்த புதிய டெண்டர் கோர திட்டமிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாநகராட்சியில் தெருவிளக்குகள் பழுது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு, தெருவிளக்குகள் பழுது பார்க்கப்படாமலேயே அது சரிபார்க்கப்பட்டதாக முடித்து வைக்கப்பட்டதாகவும் புகார்கள் வருகிறது.
பழுது பார்த்தல் மற்றும் புதிதாக தெருவிளக்கு மாற்றப்பட வேண்டிய இடங்களில் புதிய தெருவிளக்கு பொருத்தப்பட்ட பின்னரே புகார்தாரரின் மனு முடித்து வைக்கப்பட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை காவல்துறையிடம் கேட்டு பெற்றுள்ளோம். அதன்படி, அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்த முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் கோவை மாநகராட்சி பகுதிகளில் புதியதாக 5,700 எல்இடி தெருவிளக்குகளை பொருத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
