அன்னூர், செப்.29: அன்னூர் குளம் பகுதியில் குப்பையில் 4-வது நாளாக பற்றி எரிந்த தீயை சாக்கடை கழிவு நீரை கொண்டு தீயை அணைக்க பேரூராட்சி ஊழியர்கள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கண்காணிப்பதற்காக 2 ஊழியர்கள் விடிய விடிய இரவு முழுவதும் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். கோவை மாவட்டம் அன்னூர் நகர்ப்புற பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இந்தக் குளம் உள்ளது. பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது. மேலும் இந்த குளத்தின் நீர் நிலத்தடி நீரை செறிவூட்டி நகர்ப்புற பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது நகர்புற மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குளத்தின் ஒரு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் அவ்வப்போது தீப்பற்றி எரிவதால் இங்கு ஏற்படும் நச்சு புகை இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டு இடையூறாக உள்ளது. நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக தீயணைப்புத்துறையின் உதவியுடன் தீயை அணைக்க போராடி வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. நான்காவது நாளாக பற்றி எரிந்து புகை ஏற்படுத்தி வந்தது. நச்சுப் புகை நேற்று மாலை வரை தொடர்ந்து வெளியேறி வந்தது. இதனால் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு தீயை அணைக்கும் பணி நான்காவது நாளாக நேற்று காலை முதல் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் தீயை அணைக்க போதுமானதாக இல்லாத காரணத்தால் தீயை அணைக்க முடியவில்லை.
பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வாகனத்தில் அன்னூர் நகர பகுதியில் இருக்கும் சாக்கடை கழிவு நீரை வாகனங்களில் எடுத்து வந்து தீயை அணைக்க பயன்படுத்தினர். இதனால் குளத்தில் உள்ள நீரும் மாசடைகிறது. மேலும் காற்றில் கிருமிகள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 3 ஏக்கர் பரப்பளவு உள்ள குப்பைகள் உள்ள குளத்திற்கு 2 பேரூராட்சி ஊழியர்கள் விடியும் வரை காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

