Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோத்தகிரி சாலையில் 800 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஊட்டியை நோக்கி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வனச்சாலையின் வழியாக செல்லும்போது ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு உணவு அருந்தி மீதமான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்கின்றனர். குறிப்பாக மதுப்பிரியர்கள் சிலர் மது அருந்திவிட்டு வனச் சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் வனமும், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறை சார்பில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வனச்சரகர்கள் சசிகுமார், தினேஷ் தலைமையில் வனவர்கள் முன்னிலையில் வன எல்லையோரம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி சாலையில் ஓடந்துறை வனச்சோதனை சாவடியில் இருந்து முதல் கொண்டை ஊசி வளைவு வரை இப்பணியானது நடந்தது.இப்பணியில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 800 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள், வாட்டர் பாட்டில்கள், மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து வனச்சரகர் சசிகுமார் கூறுகையில், ‘காலாண்டு விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வன எல்லையோரம் நிறுத்திவிட்டு உணவருந்துவதையும், மீதமாகும் உணவு கழிவுகளை வனப்பகுதியில் வீசிச்செல்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. குறிப்பாக மதுப்பிரியர்கள் வன எல்லையோரம் அமர்ந்து மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பது நமது கடமை. அதற்கேற்ப பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்\\” என கேட்டுக்கொண்டுள்ளார்.