கோவை,செப்.28: கோவையில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்க கூட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், அன்பழகன், கனகு, நூர்ஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.தாயுமானவர் திட்டத்தில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.
தாயுமானவர் திட்டத்திற்கு மட்டும் ப்ளூடூத் இணைப்பு ரத்து செய்ய வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். கோவை மாவட்டத்தில் வெளி மாவட்ட ஆட்கள் அதிகம் உள்ளபடியால் ஒதுக்கீடு 100 சதவீதம் வழங்க வேண்டும்.தாயுமானவர் திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் ஏற்றுக்கூலி இறக்கு கூலி வண்டி வாடகை பணியாளர் ஊக்கத்தொகை ஆகியன ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும். எடைக் குறைவின்றி வழங்கிட ப்ளூடூத் முறையில் பொருள்கள் பொது மக்களுக்கு வழங்குவது போல் ரேஷன் கடைகளுக்கும் குடோனில் இருந்து ப்ளூடூத் இணைப்பு மூலம் கடைகளுக்கு நகர்வு செய்ய வேண்டும். மாநில பதிவாளர் தனது சுற்றறிக்கையில் பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வாபஸ் பெற வேண்டும்.
சுமார் 800 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்பட வேண்டும்.அனைத்து கடைகளுக்கும் கட்டுநர் நியமிக்க வேண்டும் அல்லது ரூபாய் 6000 உதவியாளர் வைத்துக்கொள்ள கூடுதலாக வழங்க வேண்டும். குடோனில் இருந்து எடை குறைவாக பொருள்கள் வருவதை ஒட்டி கடைகளில் இருப்பு குறைவு ஏற்பட்டால் அபராதம் விதிக்கும் பொழுது கடைகளை கண்காணிக்கும் அதிகாரிக்கும் சேர்த்து அபராதம் விதிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

