கோவை, செப். 28: கோவை மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கத்தில் ஆன மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்ைத மதுரையில் முதல்வர் விஜய் இன்று துவக்கி வைக்கிறார். இதையடுத்து, கோவை மாவட்டத்தில் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதில், அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 90 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த மொத்தம் 2,647 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் 1,713 குழந்தைகள், பொள்ளாச்சியில் 599 குழந்தைகள், மேட்டுப்பாளையத்தில் 305 குழந்தைகள், வால்பாறையில் 30 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பாலுசாமி கூறியதாவது: கோவையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2,647 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இவை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள மையங்களின் மூலம் வழங்கப்படும். ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 25 பேர் வீதம் மொத்தம் 100 பேருக்கு மோதிரம் வழங்கப்பட உள்ளது. தவிர, அன்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தாய்மார்களுக்கும் மோதிரம் வழங்கப்படும். ஒரு மையத்திற்கு ஒரு பிளாக் மெடிக்கல் ஆபிசர், ஒரு மெடிக்கல் ஆபீசர், 2 பகுதி கிராம சுகாதார அலுவலர் என 5 பேர் கொண்ட குழுவினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், தாய்மார்களை வாகனத்தில் மையத்திற்கு அழைத்து சென்று சிறப்பு முகாம் மூலமாக மோதிரம் வழங்கப்படும். இந்த முகாமில் தாய், சேய் இருவரின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்படும். தவிர, தாய்மார்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

