Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

எவ்வித உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடை அடைப்பு சீரமைத்த நகராட்சி தூய்மை பணியாளர் வீடியோ வைரல்; பொது மக்கள் அதிர்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் எவ்வித உபகரணங்களும் இன்றி நகராட்சி தூய்மை பணியாளர் வெறும் கைகளால் சாக்கடை அடைப்பு சீர் செய்யும் வீடியோ வைரலாகி பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேகரமாகின்றன. இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றை சீரமைக்கும் பணியிலும் ஏராளமான தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சியில் மொத்தமாக நிரந்தர, ஒப்பந்த மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் எம்.ஆர்.டி.நகர் பகுதியில் சாக்கடை முழுவதும் அடைத்து கழிவு நீர் சாலையில் செல்வதாக வந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற தூய்மை பணியாளர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடை அடைப்பை சீரமைத்தார். இதுகுறித்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளரை வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்த சூப்பர்வைசர் மீதும், நகராட்சி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.