Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாநகராட்சி அதிகாரிகள் தவெகவினருக்கு ஆதரவாக செயல்பட கூடாது: மத்திய மண்டல கூட்டத்தில் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 23: மாநகராட்சி அதிகாரிகள் தவெக.வினருக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என மத்திய மண்டல கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா லோகு தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, நிர்வாக பொறியாளர் யோகசித்ரா, உதவி நிர்வாக ெபாறியாளர் சரவணகுமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மண்டல தலைவர் மீனா லோகு பேசியதாவது:

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 20 வார்டுகளுக்கான நகரமைப்பு குழு குறைதீர்ப்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதுதொடர்பான தகவல், மண்டல தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால், இம்முகாமில், வெறும் 14 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. வார்டுக்கு ஒரு விண்ணப்பம்கூட வரவில்லை. கவுன்சிலர்களுக்கு முறைப்படி முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், இன்னும் பல பேர் வருகை தந்து, தங்களது குறைகளை விண்ணப்ப மனுவாக அளித்திருப்பார்கள். மக்களுக்கு பயனுள்ளதாக இம்முகாம் இருந்திருக்கும்.

அதிகாரிகளின் இந்த போக்கு காரணமாக, இம்முகாம் யாருக்கும் பயன்படாமல் போய்விட்டது. அதேபோல், தவெக.வினர் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து, அதில் மாநகராட்சி அதிகாரிகளை இணைத்துள்ளனர். இது, கண்டிக்கத்தக்கது. எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்தால், அதில் அதிகாரிகள் இணையக்கூடாது.

அப்படி இணைந்தால், அது ஒருதலைபட்சமாக செயல்படுவதற்கு சமம். வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்கள்தான் மக்கள் பிரதிநிதி. அவர்களுடன் இணைந்துதான், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். மாறாக, தவெக உள்பட எந்த ஒரு கட்சியினரும் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்தால், அவர்களுடன் இணையக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கலந்துஆலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகரில், சூயஸ் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட தார்ச்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். மாநகரில் தெருநாய் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், அதன் கருத்தடை விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். தார்ச்சாலை, குடிநீர், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல், மழைநீர் வடிகால் தூர் வாருதல் என மக்களின் அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மீனா லோகு பேசினார். கூட்டத்தில், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், நிதிக்குழு தலைவர் முபசீரா, கவுன்சிலர்கள் சரவணகுமார், மார்க்கெட் மனோகரன், பார்த்தீபன், பிரபா ரவீந்திரன், அன்னக்கொடி, ரேவதி, ராஜேஸ்வரி, முனியம்மாள், கமலாவதி போஸ், ஷர்மிளா, சுமா உள்பட பலர் பங்கேற்றனர்.