Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அடுக்குமாடி குடியிருப்புகள் பணி நிறைவு ; பயனாளர்களுக்கு ஒப்படைப்பதில் தாமதம்: குறைபாடுகளை சீரமைப்பது எப்போது? பொது மக்கள் கேள்வி

அன்னூர், ஜூலை 23: அன்னூர் அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் பணி நிறைவடைந்த நிலையில், மேலும் சில குறைபாடுகளை சீரமைத்து பயனாளர்களுக்கு ஒப்படைப்பதில் தாமதமாகி வருவதால் அதிருப்தி நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்புகளை உரிய பயனாளிகளுக்கு விரைந்து ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொது மக்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

அன்னூர் அருகே அல்லப்பாளையம் - முல்லை நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 348 வீடுகள் கட்டப்பட்டன. சொந்த வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரூ.11 லட்சம் மதிப்புடைய வீடு ஏழை, எளிய மக்களுக்காக 2 லட்சத்து 64 ஆயிரத்து 742 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உரிய ஆவணங்களுடன் குடியிருப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். டிசம்பர் மாதம் அரசு அறிவித்த தொகைக்கு வங்கி வரைவோலை எடுத்து வாரிய அலுவலகத்தில் செலுத்தினர். பின்னர் பிப்ரவரி 17ம் தேதி குலுக்கல் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு வீட்டுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணம் செலுத்தி 7 மாதம் ஆகிவிட்டது. இன்னும் வீடுகள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில் பயனாளர்கள் தரப்பில் கூறுகையில், வட்டிக்கு பணம் வாங்கி வாரியத்தில் செலுத்தியுள்ளோம். அந்த வட்டியுடன் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் செலுத்த வேண்டி உள்ளது. அரசு விரைவில் வீடுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குடியிருப்பு குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டுமே மீதமுள்ள வீடுகளை வாங்க முன்வந்து பார்த்து செல்கின்றனர். இந்த 348 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 8 பிளாக் ஆக பிரித்து கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு சில பிளாக்குகள் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பணி முடிந்த நிலையில் இருக்கும் குடியிருப்பை மட்டுமே பார்க்க வரும் பொது மக்களுக்கு காண்பிக்கின்றனர். மற்ற பிளாக்கில் உள்ள குடியிருப்புகளின் கதவின் நெலவுகள் துருப்பிடித்த நிலையிலும், கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்காத நிலையிலும் உள்ளது. மேலும் வீட்டின் சுவற்றுக்கு அடிக்கப்படும் பெயிண்ட்டும் பூசப்படாத நிலையில் உள்ளது.

அறையின் உள் கட்டுமான பணிகள் போன்றவை முழுமை அடையாமல் இன்னும் மோசமான நிலையில் உள்ளது. இந்த 348 குடியிருப்புகளுக்கும் சேர்த்து 2 போர்வெல் தான் உள்ளது. இதுவரை குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. அல்லப்பாளையத்திலிருந்து - முல்லை நகர் வருவதற்கு 2 கிலோ மீட்டர் மண் சாலை மிகவும் மோசமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுவரை தார் சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதற்குரிய பணிகளும் இதுவரை துவங்கவில்லை. இங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அரசு மானியத்துடன் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது என்ற தகவல் கூட அல்லப்பாளையம் பகுதியில் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோத செயல்கள நடைபெற்று வருவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்து அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ஆட்சி அமைந்து நீண்ட நாட்களாகியும் இதுவரை பயனாளர்களுக்கு தராமல் பயன்பாடற்று இருப்பதால் இந்த குடியிருப்புகள் மிகவும் சேதம் அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்புகளை உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொது மக்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.