Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோவையில் ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரி திறப்பு விழா; நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தானம் பெற இலக்கு: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

கோவை: நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். கோவை அவிநாசி ரோட்டில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் செவிலியர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இக்கல்லூரியை திறந்துவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: டெல்லியில் மாநிலங்களவையில் எத்தனை இறுக்கமான சூழலும், பொறுப்புகளும் இருந்தாலும், எனது உயிரினும் மேலான கோவை சொந்தங்களை சந்திப்பதையும், நற்பணிகள் நடக்கும் விழாக்களில் பங்கேற்பதையும் எனக்கான கடமையாக கருதுகிறேன்.

எனது மகன் பிறந்த இடம் இந்த ஜி.கே.என்.எம் மருத்துவமனை தான். அன்று மருத்துவர் மிருதுபாஷினியின் தீவிர அக்கறையினாலும், சிகிச்சையினாலும் தான் எனது மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த உதவியை என்னால் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது.

உலகெங்கிலும் முன்னணி மருத்துவமனைகளில் இந்திய செவிலியர்கள் தங்களின் முத்திரையை பதித்து வருகின்றனர். புதிதாக பயிற்சி பெறும் செவிலியர்கள் சேவை மனப்பான்மை, இரக்கம் மற்றும் தன்னம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும். இன்றைக்கு செவிலியர் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்வது, மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே குப்புசாமி நாயுடு துவக்கி வைத்த இந்த இறைப்பணி மற்றும் சேவை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும். அவருடைய தொலைநோக்கு பார்வையால் உருவான மணீஸ் உயர்நிலைப்பள்ளி முதல், தற்போதைய செவிலியர் கல்லூரி வரை இந்த அறக்கட்டளையின் சேவை, சுகாதார கல்வி மற்றும் மருத்துவ பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான இலவச மருத்துவ வசதி அளிக்கும் வயோவந்தனா மற்றும் மலிவு விலை மருந்தகங்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் என்பது இன்றைக்கு மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை பெற்று வருகிறது. நாம் தருவது பிறருக்கு பயன்படும்போது, அதை தர தயங்கக்கூடாது என்ற உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். தமிழகத்தில் உறுப்பு தானம் முறைப்படுத்தப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருவது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும். நான், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்தபோது, பிரதமர் மோடியின் பிறந்தநாளில், முதல் ஆண்டில் 73 பேரிடமும், அடுத்த ஆண்டில் 240 பேரிடமும், அதற்கு அடுத்த ஆண்டில் 7,500 பேரிடமும் கண் தானம் பெறப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 76,000 பேரிடம் கண் தானம் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இன்றைக்கு நாம் தொடங்கி வைக்கின்ற இந்த செவிலியர் கல்லூரி, எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய மருத்துவ கல்லூரியாகவும், புதிய ஆராய்ச்சிகளை செய்கின்ற ஆராய்ச்சி மையமாகவும் உருவெடுக்க வேண்டும். அதற்கு நான் உங்கள் பின்னால் உறுதுணையாக இருப்பேன்.

கண் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் போன்ற பணிகளுக்காக அரசு சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 2047-ம் ஆண்டில் பாரதம் ஒரு வளர்ந்த தேசமாகவும், உலகிற்கு வழிகாட்டும் உன்னத தேசமாகவும் உயர வேண்டும் என்றால், நாம் சுகாதார துறையில் மிகப்பெரிய வெற்றியை சாதிக்க வேண்டும். இதற்காக ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில், தனியார் பங்களிப்பும் மிக முக்கியமாக உள்ளது.

இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.விழாவில், தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் ஆர்.கோபிநாத், துணை தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு மற்றும் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.