கோவை,செப்.21:கோவை மாவட்ட வனக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட வன அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் முன் உள்ள காலி இடத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் வனத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்வெட்டவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெயில் மற்றும் மழையில் வீணாகும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்படாமல் அப்படியே வீணாக குவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் மர்ம நபர்கள் திருடி செல்லும் வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ‘‘ நாங்கள் விலை உயர்ந்த சந்தன மரம் மற்றும் இதர மரங்களை குடோனில் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். வாகை, புங்கன் போன்ற சில வகை மரங்கள் மட்டுமே இந்த வளாகத்தில் இருக்கிறது.
மேலும் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் காட்டுவதற்காக இந்த மரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். சில வகை மரங்கள் சத்தியமங்கலம் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரங்கள் உள்ள வளாகம் கண்காணிப்பு கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பான நிலையில் தான் நாங்கள் மரங்களை வைத்திருக்கிறோம், ’’ என்றார்.


